வளர்ப்பு நாய்கள் நன்றி மறவாதவை என்பதை மட்டுமே பல நேரம் நாம் சிந்தனையில் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றுக்கு இருக்கும் சிந்தனை பல சமயம் வியப்புக்குரியதாகவே இருக்கும். நம்மிடமிருந்து கற்றுக் கொண்டதை நம்மிடமே அவை முயற்சி செய்து பார்க்கும் சிறுபிள்ளைத் தனத்தை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.
எஜமானருக்கு ஒன்று என்றால் உயிரைக் கொடுக்கவும் தயங்காதவைதான் வளர்ப்பு நாய்கள். அவற்றின் உற்சாகமும் ஆரோக்கியமும் எஜமானர் அதற்குத் தரும் சமத்துவமும், சுதந்திரமும், சகோதரத்துவமும்தான். போலியாகக் கொஞ்சினால் கூட கண்டுபிடித்துவிடும் திறன் வாய்ந்த வளர்ப்பு நாய்கள் பல சமயம் எஜமானர் பாசத்தால் எல்லை மீறி செய்யும் சேஷ்டைகள் இன்னும் சுவாரஸ்யம் நிறைந்தது.
அப்படித்தான் ட்விட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வளர்ப்பு நாய் ஒன்று தன் எஜமானர், நெருப்பு விளக்கைத் தொடப் போவதை பார்த்துக்கொண்டே இருந்து அவர் தொடப் போகும் முன், அவரது கையை பிடித்து இழுத்துக்கொள்கிறது. சிரித்தபடி, எஜமானர் மீண்டும் நெருப்பு விளக்கிடம் விரலைக் கொண்டுபோக, மீண்டும் அவர் கையை பிடித்து இழுத்து கீழே வைத்தபடி பிடித்துக்கொள்ளும் காட்சி உண்மையில் பலரது நெஞ்சத்தையும் நெகிழ வைக்கிறது.
தீக்குள் விரல் விட்டால் சுடும் என்பது அதற்கும் தெரிந்திருக்கிறது என்பது ஒருபுறம், அதில் நம் எஜமானர் கையை விட முயற்சிக்கிறாரே என்கிற பதட்டத்தையும் இந்த வீடியோவில் உள்ள வளர்ப்பிஉ நாயிடம் கவனிக்க முடிகிறது.
No comments:
Post a Comment